• Social Network:

ரிஷபம்

அக்டோபர் 17-ம்தேதியில் இருந்து நவம்பர் 15-ம்தேதி வரை

ரிஷபநாதன் சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பதும், ராசியின் யோகாதிபதிகளான சனியும், புதனும் நல்லநிலையில் இருப்பதும், உங்களின் பணவரவுகளையும், தனலாபம் மற்றும் பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் ஐப்பசி மாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி. குறிப்பிட்ட சிலருக்கு இந்தமாதம் பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் நன்மைகளும் பணவரவும் இருக்கும்.

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.

நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்டநாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.