• Social Network:

கடகம்

அக்டோபர் 17-ம்தேதியில் இருந்து நவம்பர் 15-ம்தேதி வரை

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் இரண்டுக்குடைய தனாதிபதி சூரியனும், சகாயஸ்தானாதிபதி புதனும் இணைந்திருப்பதால் இந்தமாதம் கடகத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் மாதமாகவும் இது இருக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.

மூன்றில் இருக்கும் குருவால் எத்தகைய பிரச்சனைகள் என்றாலும் அதனை சுலபமாக சமாளிக்கும் மனோபலமும், சக்தியும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் கடக ராசிக்கு பின்னடைவுகள் எதையும் சொல்வதற்கு இல்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் லாபம் உண்டு. குறிப்பாக தையல் கலைஞர்கள் சந்தோஷப் படும் அளவிற்கு வருமானம் உண்டு. மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும்.

வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து பணவரவு கிடைக்கும். பிரச்சினைகள் எதுவும் இருக்காது. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணவிவகாரங்கள் இந்த மாதம் முடிவதோடு பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும்.