• Social Network:

சோழர் காலத்தில் கட்டிய கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு 

சென்னை: சென்னை, ஜெய்பாலாஜி நகரை சேர்ந்த வெங்கட்ராமன். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:-

நான், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் உள்ள பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவன். இந்த கிராமத்தில், 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளன. இந்த நிலத்துக்கு காவிரியில் இருந்து பிரிந்து வரும் மணியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது.

மேலும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. அதற்கு அருகில் நாளாபுறமும் அகழிகள் கொண்ட பழங்கால கோட்டையும் உள்ளது. இந்த கோவிலுக்கு அடியில், சுரங்கப்பாதை உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். இந்த கோவில் பிரகாரத்தில் உள்ள சுரங்கப் பாதை தஞ்சாவூர் வரை செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோவிலில் வழிபட்டால் பித்ருதோ‌ஷம், திருமண தடை, கடன் தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. ஒரு காலத்தில் பசுமையாகவும், நீர்வளத்துடன் சீரும் சிறப்புமாக திகழ்ந்த இந்த கோவில், தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறது.

இந்த கோவிலுக்கு வரும் நீர்வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. மணியாறு ஆற்றில் இருந்து வன்னிக்குடி செல்லும் கால்வாயை காணவில்லை. அதை கண்டுபிடிக்கவும் முடியவில்லை. மணியாறு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், கீழ்மான்தூர் கிராமம் வழியாக, கோவிலில் உள்ள அகழிகளுக்கு வந்து, அங்கிருந்து வடகிழக்கு வழியாக பிற கிராமங்களுக்கு செல்லும். தற்போது இந்த நீர்வழி பாதை சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் முற்றிலும் தடைப்பட்டு விட்டது. அழிந்தும் விட்டது.

எனவே, இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி, ஆகஸ்டு 22-ந்தேதி, செப்டம்பர் 13-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி என்று பல்வேறு தேதிகளில், நில நிர்வாகத்துறை ஆணையர், வருவாய்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர், மாவட்ட கலெக்டர் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இத்தனைக்கும் கோவிலுக்கு சொந்தமான நிலம், நீர் வழிப்பாதை உள்ளிட்ட சர்வே நம்பருடன் அனைத்து ஆவணங்களும் அரசு அதிகாரிகளிடம் உள்ளது. இருந்தும், அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனர்.

எனவே, கோவிலை சுற்றியுள்ள அகழிகள், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நீர் வழிப்பாதைகள், கால்வாய்கள், அகழிகள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது என்றும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த அவர்களுக்கு நோட்டீசு அனுப்பும் பணி நடை பெறுகிறது என்றும் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களுக்குள் அப்புறப்படுத்தப்பட்டு விடும் என்றும் கூடுதல் அரசு பிளீடர் உத்தரவாதம் அளித்தார்.

அவரது உத்தரவாதத்தை பதிவு செய்துக் கொள்கிறோம். இந்த உத்தரவாதத்தை இந்த ஐகோர்ட்டு பதிவு செய்துள்ளதால், இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும்.

ஆனால் மனுதாரர் தரப்பு வக்கீல், தமிழக அரசு வன்னியகுடி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத்தான் நடவடிக்கை எடுக்கிறது. பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

அதற்கு கூடுதல் அரசு பிளீடர், அந்த நிலங்கள் எல்லாம் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

எனவே, பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் அகழிகள், கால்வாய்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்த விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அற நிலையத்துறை அதிகாரிகள், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற் கொண்டு, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 3 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.