• Social Network:

பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை: இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2017-18-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. முதன் முதலாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரெயில்வே அமைச்சகம் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ரூ.3,593 கோடி ஒதுக்கியுள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள ரெயில்வே திட்டங்களுக்காக ரூ.2,287 கோடியும், கேரளாவில் ரெயில் திட்டங்களுக்காக ரூ.1,206 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைவிட தமிழகத்தில் 39.79 சதவீதமும், கேரளாவில் 18.92 சதவீதமும் அதிகம்.

அதேபோல் பயணிகள் வசதிகளுக்காக தமிழகத்தில் ரூ.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கு ரூ.33 கோடி தான் ஒதுக்கப்பட்டது. இது 15.15 சதவீதம் அதிகம்.

* தமிழகத்தில் சேலம்-ஓமலூர் இடையேயான வழித்தடத்தில் 11 கி.மீ தூரத்திற்கு இரட்டை பாதையாக்க ரூ.76.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 ரெயில்வே வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டத்திற்காக ரூ.404 கோடியே 16 லட்சமும், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த ரூ.19 கோடியே 76 லட்சமும், 12 கட்டுமான திட்ட பணிகள் மற்றும் ரெயில்வே மேம்பாலம், ரெயில்வே கீழ் பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக ரூ.382 கோடியே 9 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* விழுப்புரம்-கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை-தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையேயான 228 கிலோமீட்டர் ரெயில் பாதையை மின்மயமாக்க ரூ.251 கோடியே 33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஓமலூர்-பெங்களூரு இடையேயான வழித்தடத்தின் மின்மயமாக்கலுக்கு ரூ.152 கோடியே 83 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* 12 இடங்களில் 9 ரெயில்வே மேம்பாலம் மற்றும் கீழ் பாலம், 19 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.205 கோடியே 76 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த பணிக்கு மாநில அரசு ஒதுக்கீடு ரூ.176 கோடியே 64 லட்சம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.