• Social Network:

மத்திய பிரதேசத்தில் கொடூரம் - காதலியை கொன்று வீட்டுக்குள் கல்லறை கட்டிய வாலிபர் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் ஒரு வாலிபர் தனது காதலியை கொன்று வீட்டுக்குள் புதைத்து கல்லறை எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 
மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் அகான்ஷா(28). இவருக்கு பேஸ்புக்கில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் உதய்தாஸ் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டது. பேஸ்புக் தொடர்பு காதலாக மாறியது. இந்நிலையில், அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றார் அகான்ஷா. கடந்த டிசம்பர் மாதம் வரை தனது பெற்றோரிடம் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதன்பின், 2 மாதங்களாக அகான்ஷாவை அவரது பெற்றோர்களால் தொடர்பு ெகாள்ளவே முடியவில்லை. சந்தேகம் அடைந்த அகான்ஷாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

அகான்ஷாவின் பெற்றோர் பயன்படுத்திய செல்போன்களில் அகான்ஷா பேசிய போன்கால்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கடைசியாக அவர் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள உதய் தாஸ் வீட்டில் இருந்து அகான்ஷா பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அகான்ஷாவை அவரது காதலனே கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு போபால் வந்துள்ளார் அகான்ஷா. நண்பர்களாக இருந்துள்ள இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சண்டையில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த உதய், அகான்ஷாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்துள்ளார். உடலை இரும்பு பெட்டியில் வைத்து புதைத்தபின் அந்த இடத்தில் கல்லறை கட்டியுள்ளார்’’ என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உதய் தாஸிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.