• Social Network:

இரவில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த நிர்வாண சாமியார் கோபி அருகே பரபரப்பு

கோபி: கோபி அருகே சுற்றி திரிந்த நிர்வாண சாமியார், பெண்ணின் வீட்டுக்குள் சென்று படுத்ததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திரண்டு வந்தனர். அதற்குள் சாமியார் தப்பி ஓடிவிட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கன்னக்குளி என்ற இடத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டுமனைகள் உள்ளன. விற்பனைக்காக பிரிக்கப்பட்ட நிலத்தில் சிறிய அளவிலான கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீரென சாமியார் ஒருவரும், அவரது சீடர்கள் எனக்கூறி சென்னை பல்லாவரத்தை சேர்ந்த செந்தில்குமார், திருச்செங்கோட்டை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும் வந்து தங்கினர்.
இந்த சாமியார் மன்னார்குடியை சேர்ந்த சூட்டுகோல் சித்தரின் அடுத்த அவதாரம் என்றும், அவரது பெயர் ராஜசேகரன் என்றும் அவர் நிர்வாண கோலத்தில் முற்றிலும் துறந்த நிலையில் தான் இருப்பார் எனவும் கிராமத்திற்குள் தகவல் பரவியது.

அந்த சாமியார் தன் கையில் கிடைப்பதை கொண்டு எதிரில் இருப்பவர்களை அடித்தால் அவர் வாழ்க்கையில் பெரும் செல்வந்தர் ஆகமுடியும் என்றும் தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து அந்த நிர்வாண சாமியாரை சந்திப்பதற்காக கூட்டம் வர தொடங்கியது. அந்த சாமியார் அருகில் உள்ள தோட்டங்களில் உள்ள தண்ணீர் தொட்டியில் நிர்வாண நிலையில் குளிப்பதும், அங்கு வருபவர்களுக்கு நிர்வாண நிலையில் ஆசிர்வாதம் வழங்குவதுமாக இருந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் பலரும் வரத்தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று இரவு நிர்வாண சாமியார் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் சென்று நிர்வாண நிலையில் படுத்துள்ளார். வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். 

தகவல் அறிந்து கிராம மக்கள் சாமியாரை பிடிக்க திரண்டு வந்தனர். இதை அறிந்த அந்த சாமியாரும் அவரது சீடர்களும் அங்கிருந்து தப்பினர். அவர் தங்கி இருந்த பகுதியிலும் தேடினர். சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாமியாரை அழைத்து வந்த நில உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அதில் பல ஆண்டுகளாக விற்பனையாகாத நிலத்தை விற்பதற்காக சாமியாரை அவர் அழைத்து வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சாமியார் வந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்வாண சாமியார் விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.