• Social Network:

கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

சென்னை: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் நேற்று காலை டி.பி.ஐ. வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு அந்த வளாகத்தின் எதிரே ஏராளமான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்திலும், சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. போலீசார் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

அதன்பின்னரும் ஆசிரியர்கள் அணி, அணியாக வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ச.மோசஸ், பொருளாளர் எஸ்.ஜீவானந்தம் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சங்க பொதுச்செயலாளர் பாலச்சந்திரன் கூறும்போது, “இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொள்ள வெளியூர்களில் இருந்து வந்தவர்களை போலீசார் மதுராந்தகத்திலேயே தடுத்துவிட்டனர்” என்றார்.