• Social Network:

அயனாவரம் பூங்காவில் ராக்கெட் வெடிகுண்டு போன்ற மர்மபொருள் சிக்கியது - போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் ‘சன்னிவேல்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் குழந்தைகள் விளையாடும் சிறிய பூங்கா இருக்கிறது. இந்த பூங்கா வளாகத்தில், நேற்று பகலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ராக்கெட் வெடிகுண்டு போன்ற மர்மபொருள் கிடப்பதை பார்த்தனர். அதுபற்றி பூங்கா காவலாளியிடம் தகவல் சொன்னார்கள். பூங்கா காவலாளி அதைப்பார்த்து வெடிகுண்டாக இருக்கலாம் என்று பயந்து உடனடியாக குழந்தைகளை அங்கிருந்து வெளியேற்றினார்.

அயனாவரம் போலீசுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கந்தவேல் விரைந்து சென்று ராக்கெட் வெடிகுண்டு போன்ற பொருளை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார். அயனாவரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தில் மணல் மூட்டைகளுக்கு நடுவில் அந்த ராக்கெட் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் வைக்கப்பட்டது.

அடையாறு மருதம் வளாகத்தில் செயல்படும் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து ராக்கெட் வெடிகுண்டு போன்ற பொருளை பாதுகாப்பாக போலீஸ் வாகனத்தில் எடுத்துச் சென்றனர். இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்கள் கூறும்போது,

“இந்த மர்மபொருள் ராக்கெட் வெடிகுண்டு இல்லை என்றும், இதை ராணுவத்தில் பயன்படுத்துவார்கள் என்றும், காட்டுப்பகுதியில் முகாமிட்டிருக்கும்போது இதை வெடிக்கச் செய்து வெளிச்சத்தை உண்டாக்குவார்கள் என்றும், இது மிகவும் பழமையானதாக உள்ளது என்றும் கூறினார்கள்”.