• Social Network:

திருச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் மரணம்: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

கொப்பம்பட்டி: திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி அருகே உள்ள வயிரிசெட்டிப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னவண்டு (வயது 45) , தனியார் பஸ் டிரைவர்.

இவருக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்து வந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் பரிசோதித்த போது மர்ம காய்ச்சல் இருக்க கூடும் என கூறினர்.

இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னவண்டு நேற்றிரவு இறந்தார்.

ஏற்கனவே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 4பேர் பலியாகினர். இன்று டிரைவர் இறந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஈரோட்டை சேர்ந்த 2 வயது சிறுமியும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.