• Social Network:

பாம்பு சட்டை தப்பிக்கும்..! விமர்சனம்

சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால், அண்ணியை தனது அம்மாவாகவே மதித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை இல்லை. பல இடங்களில் வேலை தேடியும் பலன்கிடைக்கவில்லை. இறுதியில் தண்ணீர் கேன் நிறுவனம் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் வேலையில் சேர்கிறார். அதன் மூலம் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பாபி சிம்ஹா தனது அண்ணிக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்கிறார்.

தண்ணீர் கேன் போடும் வேலையை விருப்பமில்லாமல் செய்து வரும் பாபி சிம்ஹா, வேலைக்கு சேர்ந்த மறுநாளே, படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார். மேலும் முதல் சந்திப்பிலேயே கீர்த்தி மீது காதல் வயப்படுகிறார். பின்னரை கீர்த்தியை பார்ப்பதற்காகவே தினமும் தண்ணீர் கேன் போடும் வேலையை தொடர்கிறார். பின்னர் ஒருநாள் தனது காதலை கீர்த்தியிடம் தெரிவிக்கிறார்.

முதலில் காதலிக்க மறுக்கும் கீர்த்தி, பின்னர் பாபி சிம்ஹாவின் மனதை புரிந்து கொண்டு, அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கீர்த்தியின் தந்தையாக வரும் சார்லி சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் செய்பவர். இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் அவர், ஊரில் பாபி சிம்ஹாவையும், பானுவையும் சேர்த்து தவறாக பேசுவதாகக் கூறுகிறார். இதனால் கோபமடையும் பாபி தனது அண்ணியை பற்றி அவதூறாக பேச வேண்டாம் என்று வெளியேறுகிறார்.
இந்த பிரச்சனை பானுவுக்கு தெரியவர, தான் வேறு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். பின்னர் பானுவின் திருமணத்திற்காக தீவிரமாக வேலை செய்து வரும் பாபி சிம்ஹா, அதற்காக ஒரு மாப்பிள்ளையையும் தேர்ந்தெடுக்கிறார். இந்நிலையில், அந்த மாப்பிள்ளை ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அவரை மீட்க ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து செய்யும் பாபி சிம்ஹா, வில்லனாக வரும் கே.ராஜனின் தலைமையிலான கள்ளநோட்டு கும்பலிடம் தனது பணத்தை இழக்கிறார். கடைசியில் தனது பணத்தை எப்படி மீட்கிறார்? தனது அண்ணிக்கு திருமணம் செய்து வைத்தாரா? கீர்த்தி சுரேஷை கரம்பிடித்தாரா என்பது படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
பாபி சிம்ஹா படத்தின் தொடக்கம் முதல், இறுதிவரை தனது தனித்துவமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி தனக்குரிய குறும்பு சேட்டைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நாயகனாக இருந்தாலும் தனக்குரிய வில்லத்தனத்திலும் மிரட்டி உள்ளார். குறிப்பாக தனது மற்ற படங்களை விட இந்த படத்தில் காதல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை சேலை மற்றும் சுடிதார்களில் அங்குமிங்கும் அழகான பெண்ணாக வலம் வருகிறார். திரையில் தன்னை ரசிக்கும்படி படம் முழுக்க வந்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், நாயகனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் முத்திரை பதித்திருக்கிறார். இப்படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பானு தனக்குரிய காட்சிகளை சிறப்பாக தந்திருக்கிறார். படம் முழுவதும் அழகான குடும்ப பெண்ணாக வலம் வருகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.
படத்தில் வில்லனாக வலம் வரும் கே.ராஜன் படம் முழுவதும் மிரட்டி இருக்கிறார். இவருக்கு ஒரு வலிமையான கதாபாத்திரம். அவரது வசனங்களும், தோற்றமும், உடல் செய்கைகளும் ரசிக்கும்படி உள்ளது. அவருக்கு துணையாக வரும் ஜோக்கர் சோமசுந்தரம் சூழ்நிலைக்கு ஏற்ப தனது போக்கை மாற்றிக் கொள்ளும் ஒரு நல்ல பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவரது ஸ்டைல், ஜோக்கர் படத்தில் இருப்பது போலவே இதிலும் பேசும்படியாக இருக்கிறது.

திரைக்கதையில் இயக்குநர் ஆடம் ஜான்சன் நன்றாக கவனம் செலுத்தி இருக்கிறார். தப்பு செய்பவர்கள் கண்டிப்பாக அதன் பலனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள் என்றும், சாப்பாடு கூட இல்லாத ஏழையாக இருந்தாலும் தங்களது பிழைப்புக்காக, அப்படி பட்டவர்கள் ஒருகாலும் தவறான வழிக்கு செல்ல மாட்டார்கள் அப்படி ஒரு எண்ணமும் அவர்களுக்கு வராது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதற்காக இயக்குனருக்கு சபாஷ் போடலாம். ஒவ்வொரு வசனங்களுமே ரசிக்கும் படி உள்ளது.

துப்புரவு தொழிலாளராக வரும் சார்லி தனது முதிர்ந்த நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வசனங்களும் மனதில் நிற்கிறது. மொட்டை ராஜேந்திரனை பொறுத்தவரையில், காமெடியில் கலக்கிய நேரத்தில் பாபி சிம்ஹாவுக்கு சில அறிவுரைகளை கூறுவதன் மூலம் குணசித்திர நடிகராகவும் வலம் வருவார் இனி. .

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. வசனங்கள் மிகப்பெரிய பலம்.
பாம்புசட்டை தப்பிக்கும்..!