• Social Network:

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 698 புள்ளிகள், நிப்டி 229 புள்ளிகள் சரிவு

புதுடெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

அதேபோல், அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பாராத விதமாக ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அசத்தினார். இந்த இரண்டு முக்கிய சம்பவம் இந்திய, ஆசிய மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் கடுமையான வீழ்ச்சி காணப்பட்டது. தொடக்கம் முதலே பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்பட்டது.

மும்பை தேசிய பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 698.86 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 26 ஆயிரத்து 818 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 229.45 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 8 ஆயிரத்து 296 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 54 பைசா வீழ்ச்சி அடைந்து 67.17 ஆக உள்ளது.